தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2,200 இந்தியர்கள் ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்

ஈராக்கில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திச் செல்லபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா உள்பட 46 நர்சுகள் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அந்த விமானத்தில் ஈராக்கில் இருந்து மேலும் 70 இந்திய தொழிலாளர்களும் அழைத்து வரப்பட்டனர்.

இதேபோல் ஈராக்கில் இருந்து மற்றொரு தனி விமானத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 24 நர்சுகள் ஐதராபாத் அழைத்து வரப்பட்டனர். சம்ஷதாபாத் விமான நிலையத்தில் அவர்களை ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், நர்சுகள் தனி பஸ்களில் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.Delhi_airport

இந்த நிலையில், ஈராக் ஏர்வேஸ் விமான போக்குவரத்து நிறுவத்தின் தனி விமானம் மூலம் அங்கிருந்து 201 இந்தியர்கள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து இருந்தது.

ஈராக்கில் இருந்து மேலும் 2,200 இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அவர்களில் 1,600 பேருக்கு மத்திய அரசின் சார்பில் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், 600 பேருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களே டிக்கெட்டுக்கான ஏற்பாடு செய்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார். அவர்களில் கொல்கத்தா, பெங்களூர், மும்பை, ஐதராபாத் நகரங்களைச் சேர்ந்த கணிசமான பேர் நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தாய்நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் கர்பலா, நஜாப், பஸ்ரா நகரங்களில் தலா 6 பேரை கொண்ட இந்திய குழுக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Comments
Loading...