Designed by Iniyas LTD
4 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுடன் பெண் யாழில் கைது!
மூன்று கோடியே 93 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கபிஸ்கட்டுக்களை காரில் கடத்திக் கொண்டிருந்த பெண் ஒருவரை யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் விசேட குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கார் ஒன்றின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு 7 கிலோ நிறைகொண்ட குறித்த தங்கமும் மேலும் சில வெளி நாட்டு நாணயங்கள் மற்றும் உள் நாட்டு நாணயங்கள் கடத்தப்ப்ட்டுக்கொண்டிருந்த போது யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கு அமைவாகவே கடத்தல் முறியடிக்கப்பட்டு காரில் இருந்த 50 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
நேற்று அதிகாலை 3.55 மணிக்கு யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.கே.ஜயலத்துக்கு காரொன்றில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழான விஷேட குழுவொன்றை இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயலத் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த குழுவானது யாழ். சாவகச்சேரி, சங்கத்தானி ரயில் நிலையத்துக்கு அருகே வைத்து சந்தேகத்துக்கு இடமான குறித்த காரை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் போது காருக்குள் இருந்து 7 கிலோ நிறைக் கொண்ட சுமார் 70 தங்க பிஸ்கட்டுக்களை மீட்ட பொலிஸார் வெளி நாட்டு உள் நாட்டு நாணயங்கள் பலவற்றையும் கைப்பற்றினர். கொழும்பில் இருந்தே இந்த தங்க பிஸ்கட்டுக்களும் பணமும் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்துள்ள பொலிஸார்., பெரும்பாலும் கடல் மார்க்கமாக இந்தியாவின் தமிழ் நாட்டு பிரதேசத்துக்கு கடத்துவதே இதன் நோக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பெண் குறித்த பெருந் தொகை தங்கம் தனக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் பதிலளிக்க முடியாமல் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயலத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.