தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் – இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு

201610031742500327_pakistan-india-nsas-talk-over-phone-agree-to-reduce_secvpfகாஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியது. அங்கிருந்த 7 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

 இதனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்றும் அல்லது ஏற்கனவே ஊடுருவியவர்கள் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடலாம் என்றும் மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

 நேற்றும் பாரமுல்லா பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தனர். இரு நாட்டு எல்லையிலும் பதட்டமான சூழல் நிலவி வருவதையடுத்து எல்லையோர கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழலை தணிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் ஜனுஜா ஆகியோர் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தானின் மூத்த தூதரக அதிகாரியான சர்தாஜ் ஆஜிஸ் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன

 இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது பதட்டத்தை தணிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் இணையதள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Comments
Loading...