Designed by Iniyas LTD
65 ஆயிரம் எச்–1 பி விசாக்கள் வழங்கப்படும் – அமெரிக்கா
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்–1 பி விசாக்களை வழங்கி வருகிறது.
இந்த விசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது. 2017–ம் நிதி ஆண்டுக்கான இந்த விசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஏற்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அக்டோபர் 1–ந் தேதி தொடங்குகிற (அமெரிக்க) நிதி ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்–1 பி விசாக்கள் வழங்கப்படும்.
இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. முதலில் பெறப்படுகிற அமெரிக்காவின் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களின் 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு, இந்த 65 ஆயிரம் எச்–1 பி விசா என்ற எண்ணிக்கை வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிற முதல் 5 பணி நாட்களிலேயே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது. மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான எச்–1 பி விசா விண்ணப்பங்கள் பெறப்படுகிறபோது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.