தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

65000 வீட்டுத்திட்டத்தை நியாயப்படுத்துகிறது புனர்வாழ்வு அமைச்சு!

swaminathanவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கான நிறுவனத்தைத் தெரிவுசெய்வதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவ்வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறவில்லையென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.

அது தொடர்பாக அவ்வமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையின்படி, குறித்த வீட்டுத் திட்டத்தை அமைச்சரவை அனுமதித்த பின்னர், இது தொடர்பான செயற்குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், அதன்படி, இந்த வீட்டுத் திட்டத்துக்காக 35 நிறுவனங்கள் தங்களது விருப்பை வெளியிட்டதாகவும், அதில் 15 நிறுவனங்களின் கேள்விகள், தகுதியானவையாக அடையாளங்காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிற.  அதன் பின்னர், 650 மில்லியன் ரூபாய்க்கான கேள்விப் பாதுகாப்பையும் தொழில்நுட்ப மதிப்பீட்டையும், ஆர்செலார் மிட்டல், ஈ.பி.ஐ-ஓ.சி.பி.எல் ஆகிய இரு நிறுவனங்கள் மாத்திரமே வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தின் கேள்வியின்படி, சமையலறை அலுமாரி உள்ளடங்கிய சமையலறை, எரிவாயுவுடன் கூடிய எரிவாயு அடுப்பு, நீர்த் தொட்டி, நீர்குழாய், சமைக்கும் உபகரணங்கள், மேசையுடனும் நான்கு கதிரைகளுடனும் கூடிய உணவுண்ணும் அறை, 3 சோபாத் தொகுதிகளுடன் கூடிய வாழும் அறை, கோப்பி – தொலைக்காட்சி ஸ்டான்ட், தொலைக்காட்சி, இலவச நிற்கும் மின்விசிறி, பெரிய படுக்கை அறையில் இரட்டைப் படுக்கையொன்று, இரண்டு மேசைகள், இலவச நிற்கும் மின்விசிறி, இரண்டாவது படுக்கையறையில் தனிக் கட்டில்கள் இரண்டு, அவற்றுக்கான மெத்தைகள், எழுதும் மேசையும் கதிரையும், வை-பை வசதிகள் கொண்ட மடிக்கணினி, இலவச நிற்கும் மின்விசிறி ஆகியன உள்ளடங்கிய வீட்டோடு, அதில் சூரியக்கலங்களும் மின் இணைப்புகளுடன் கூடிய மின்விளக்குகள், 500 லீற்றர் நீர்த்தாங்கியுடன் கூடிய குழாய்க்கிணறு, ஒவ்வோர் அறைக்கும் பதிகல் (டைல்), மலசலகூடம் ஆகியன உள்ளடங்கிய குறித்த வீட்டின் பெறுமதி, வரிகளின்றி 2.18 மில்லியன் ரூபாய்களாகும்.

ஈ.பி.ஐ-ஓ.சி.பி.எல் நிறுவனத்தின் வழக்கமான வீடொன்று, மலசலகூடத்துடன் கூடிய பெறுமதி 1,307,306 ரூபாயாகும்.

இந்நிறுவனங்களின் நிதி முன்மொழிவுகளின்போது, தேவையான ஆவணங்களை ஈ.பி.ஐ-ஓ.சி.பி.எல் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை எனவும், ஆர்செல் மிட்டல் நிறுவனம், வெளிநாட்டு வங்கியொன்றின் விரிவான நிதி அறிக்கையொன்றைச் சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ஆர்செல் மிட்டல் நிறுவனத்தின் இரும்பு வீட்டினால், வீட்டுக்குள் வெப்பநிலை அதிகமாகக் காணப்படுமென்ற குற்றச்சாட்டு எழுப்பப்படும் நிலையில், குறித்த நிறுவனத்தின் வீடுகள் இரண்டை மாதிரிக்காக நிர்மாணிக்குமாறு கேட்கப்பட்டதாகவும், அதன்போது, வெளி வெப்பநிலையை விட, வீட்டுக்குள் காணப்படும் வெப்பநிலை 3 தொடக்கம் 5 செல்சியல் பாகை குறைவாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...