Designed by Iniyas LTD
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வடமாகாண ஏழு சாலைகள் ஊழியர்கள் ..
இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் பணிப்புறக்கணிப்பால் பொது மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள் என்றும்,
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததாகவும் தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

