தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நோர்வே கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 60 மில்லியன் குரோன்களை வழங்குகிறது

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்குள் 60 மில்லியன் குரோன்களை நோர்வே அரசு வழங்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டுக்கான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தந்துள்ள மேரியன் ஹேகன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த காலங்களில் இலங்கை கண்ணி வெடிகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது கண்ணி வெடி அற்ற நாடாக திகழும் நிலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டை கண்ணி வெடி தடுப்பு ஆண்டாக நோர்வே பிரகடனம் செய்துள்ளதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை அடைவதற்கு இலங்கைக்கு வேண்டிய உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.

நல்லெண்ண செயற்பாடுகளில் கண்ணி வெடி அகற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். இதனூடாக, யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்பக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

1997 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட கண்ணி வெடி தடை செய்யும் பிரகடனத்தின் பிரகாரம் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவது நோர்வேயின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. 2018 இல், 18 நாடுகளில் கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு 325 மில்லியன் குரோன்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. 2019 ஆம் ஆண்டிலும் இதே அளவு நிதி உதவிகள் வழங்கப்படும்” என மேரியன் ஹேகன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...