Designed by Iniyas LTD
வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவிப்பு
வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்தனர்.
இது தொடர்பாக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்தனர்.
இப்பகுதிக்குள் கலிபாவின் படைகள் நுழைந்த நேரத்தில் இருந்து, முந்தைய ஆட்சியாளர்களின் அதிகாரம் காலாவதியாகி விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் புதிய கலிபாவுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் அந்த ’ஆடியோ அறிக்கை’ தெரிவித்தது.
இந்த புதிய ஆட்சி அமைக்கப்பட்டதால் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற தங்கள் அமைப்பின் பெயர் ’இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிவித்தார்.
இதன் அடுத்தகட்டமாக ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்துக் கொண்டுள்ளனர்.ஐ.எஸ். போராளிகளின் பிடியில் உள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.
இவர்களின் ஆவேசத்தை கண்டு அஞ்சி நடுங்கிய குர்திஷ் மற்றும் யாஸிதி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 20 ஆயிரம் மக்கள் ஜிஹாதிகளால் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். சிஞ்சார் பகுதியில் உள்ள மலை உச்சிகளில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் அவர்கள் தவித்து வந்த அவர்களை அமெரிக்க விமானப்படையின் உதவியுடன் குர்திஷ் படையினர் சமீபத்தில் காப்பாற்றினர்.
இதற்கிடையில், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த விசுமார் 500 பேரை இவர்கள் கொன்றும், சிலரை உயிருடனும் புதைத்துள்ளனர் என ஈராக்கின் மனித உரிமை துறை மந்திரி கடந்த 10-ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களில் மட்டும் சிரியா நாட்டின் எண்ணை வளம்மிக்க கிழக்கு பகுதியான டெய்ர் எஸார் மாகாணத்தில் உள்ள க்ரணிஜ், அபு ஹமாம், கஷ்கியே உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 700 பழங்குடியின மக்களை ஐ.எஸ்.படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அவர்களில் 600 மேற்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த படையினரால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் உள்ளிட்ட சுமார் 1800 பேரின் கதி என்னவாயிற்று? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை எனவும் இந்த அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
டெய்ர் எஸார் மாகாணத்தின் பல பகுதிகளை பிடித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் ஆக்கிக்கொண்ட ஐ.எஸ்.படைகள் தற்போது, சிரியாவின் வடக்கில் உள்ள மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அதிபர் பஷர் அல் ஆஸாத்தின் படைகளுடன் ஆவேசப் போர் நடத்தி வருகின்றன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.