Designed by Iniyas LTD
மலையக மக்களால் அன்றாடம் உண்ணப்படும் கோதுமை ரொட்டிக்குப் பதிலாக அரிசி
மலையக மக்களால் அன்றாடம் உண்ணப்படும், கோதுமை ரொட்டிக்குப் பதிலாக, அரிசியைப் பயன்படுத்தப் பழக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் கோதுமை மா முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பதற்கான புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தோட்டங்கள் தோறும் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவை ஊக்குவிக்கும் திட்டம் பற்றி விவசாயத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தமிழோசையிடம் விளக்கமளிக்கையில், எமது தோட்டத்தொழிலாளர்கள் கோதுமை மாவுக்குத் தான் பழக்கப்பட்டுள்ளனர். கோதுமை மா 90 ரூபாய் அளவில் தற்போது விற்கப்படுகிறது. அதனால் அந்த மக்களுக்கு செலவு அதிகம். அத்தோடு பல்வேறு சத்துக்குறைபாடு நோய்களுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது.
எமது நாட்டில் தேவையான அளவு அரிசி உற்பத்தி நடக்கிறது. அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மலையக மக்களுக்கு அரிசிமா உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகளை பழக்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமும் அரசினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அரிசி மாவில் ரொட்டி தயாரிக்கும் முறை, சிற்றுண்டி தயாரிக்கும் முறைகளை தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை ஊடாக சொல்லிக் கொடுக்கவுள்ளோம்.கோதுமை மா ஒருகிலோ 90 ரூபாவுக்கு விற்கப்படும்போது, அரிசி மாவை 60 ரூபாவுக்கு விற்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வறட்சி போன்ற இயற்கை சவால்கள் இல்லாவிட்டால் இந்த விலை நிர்ணயத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுக்க முடியும். என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே,வரலாற்று ரீதியாக மலையக மக்கள் மத்தியில் நிலவும் உணவு வழக்கத்தை மாற்றியமைப்பது அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெ.முத்துலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார். மலையகத் தோட்டப்புற மக்களின் உழைப்புமுறை, பொருளாதாரம் மற்றும் பிரதேச காலநிலை போன்ற காரணங்களினாலேயே அப்பிரதேசத்தில் கோதுமை உணவு முறையில் அதிக நாட்டம் காணப்படுவதாகவும் முத்துலிங்கம் கூறினார். மக்களை அரிசி உணவுக்கு முழுமையாக மாற்றும் அரசின் முன்னைய நிகழ்ச்சித் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.