Designed by Iniyas LTD
நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் இருந்து லியோனல் மெஸ்ஸி விலகினார்
நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் உலக சம்பியன் ஜேர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.இந்தப் போட்டியிலிருந்து அர்ஜென்டினா அணி்த்தலைவர் லியோனல் மெஸ்ஸி விலகினார்.
ஜேர்மனியில், அர்ஜென்டினா, ஜேர்மனி அணிகள் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இன்று நடக்கிறது.இப்போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து காயம் காரணமாக அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி விலகினார்.
சமீபத்தில் முடிந்த, வில்லாரியல் அணிக்கு எதிரான ‘லா லிகா’ தொடரின் லீக் போட்டியின் போது, பார்சிலோனா அணிக்காக விளையாடிய இவரது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
பிரேசிலில் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், ஜேர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதின.இப்போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி பெற்று, உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இல்லாதது பின்னடைவு.
சர்வதேச கால்பந்து அரங்கில், இவ்விரு அணிகள் 21 முறை மோதின. இதில் அர்ஜென்டினா 9, ஜேர்மனி 7 போட்டிகளில் வென்றன. ஐந்து போட்டிகள் சமநிலையில் முடிந்தன.
இவ்விரு அணிகள் மோதிய 13 நட்பு போட்டியில், 8ல் அர்ஜென்டினாவும், 3ல் ஜேர்மனியும் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் சமநிலையானது.