Designed by Iniyas LTD
சுப்பிரமணிய சாமி மீது அவதூறு வழக்கு
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சிக்கு சுப்ரமணியசாமி பிரத்யேக பேட்டியளித்தார். அதில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்தார். அதில் மீனவர் பிரச்சினை மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதி வருவதாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் சாமி கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இம்மனுவை தாக்கல் செய்தார். சுப்பிரமணிய சாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.