Designed by Iniyas LTD
நளினியின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி தனது தந்தையை பார்த்து கொள்வதற்காக அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை ஆயுள் தண்டனை கைதியான நளினி தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை (ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர்) சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவருக்கு தற்போது 90 வயது ஆகிவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கும் என் தந்தையுடன், அவரது கடைசி காலத்தில் உடன் இருக்க விரும்புகிறேன். எனவே எனக்கு ஒரு மாதம் காலம் (பெயில்) விடுப்பு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு மனுவில், நளினியை தந்தையுடன் ஒரு மாதம் தங்க அனுமதித்தால், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் நளினி தன்னுடன் இருக்க அவரது தந்தையே விரும்பாததால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வக்கீல் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்ததுடன், அதை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.