தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் சிங்கள பிக்குகள் கணி அபரிப்பில் ஈடுபட்டுள்ளனர்- பா.அரியநேந்திரன்

மட்டக்களப்பு, சின்னவத்தை 25 எம்.சீ 28ஆம் கண்டத்தில் இருக்கும் தமிழர்களது காணிகளை இரண்டு பௌத்த பிக்குகள் அபகரிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனிடம் முறையிட்டுள்ளனர். துறைநீலாவணை ஏழாம் வட்டாரத்தில் இருக்கும் நாகமுத்து லக்சுமணன், நாகமுத்து கமலலக்சுமி, காத்தமுத்து ராஜலக்சுமி, காத்தமுத்து ராசமணி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் வயல் காணியை நன்கு திட்டமிட்ட முறையில் அபகரித்து சிங்கள மக்களுக்கு வயல் செய்வதற்காக கையளித்திருக்கின்றனர்.ariyanenthiran.jpg1

இதுதொடர்பாக வெல்லாவெளி பிரதேச செயலாளரிடம் தாங்கள் முறையிட்ட போது, அபகரிக்கப்பட்ட காணி உங்களுக்கு சொந்தமானது என்று அவர் கூறியதாகவும், வெல்லாவெளி பொலிசாரிடம் சென்று முறையிட்ட போது பௌத்த துறவிகள் சொன்ன சொல்லை மீறி தாங்கள் எதுவும் செய்யமுடியாது அதனை மீட்டுத்தருவதற்கான எந்த நடவடிக்கையினையும் எடுக்க மாட்டோம் என கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்துரைக்கையில், காலாகாலமாக தமிழர்களே இங்கு வயல் செய்து வந்தனர். அந்த இடத்தினை அபகரிக்கும் நோக்குடன் இவ்வாறான பௌத்த பிக்குகள் சட்டத்தினை மீறி செயற்படுவதானது மிகவும் கீழ்த்தரமான விடயமாகும், மட்டக்களப்பில் இருக்கும் பௌத்த துறவிக்கு தமிழர்களது பூர்வீக காணிகளை அபகரிப்பதுதான் அவரது முழு பணியாகவும் இருந்து வருகின்றது. கெவுளியாமடுவிலே காணி அபகரிப்பில் ஈடுபட்ட இவர் சின்னவத்தையில் இருக்கு இன்னுமொரு பௌத்த துறவியுடன் சேர்ந்து எல்லை புறங்களில் உள்ள தமிழர்களது காணிகளை திட்டமிட்டமுறையில் அபகரித்து தனது இனத்திற்கு கையளிப்பதனையே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.

நாட்டிலே சிவில் நிருவாகம் சிறந்த முறையில் நடைபெறுகின்றது என்று அரசாங்கம் வாயளவில் கூறினாலும் அது செயல்வடிவில் இல்லை என்பதற்கு பொலிசார் இந்த காணி விடயத்தில் எடுத்த தீர்மானம் சான்றாக அமையும்.தமிழர்களது பூர்வீக நிலங்கள் நாளுக்கு இவ்வாறு தவறான முறையில் வேற்று இனத்தவர்களினால் சூறையாடிக்கொண்டு போவதனை தமிழர்களாகிய நாம் வெறுமனே பார்த்துக்கொண்டு வாய் மூடி கைகட்டி நிற்போமானால் இருக்கின்ற எமது நிலங்கள் எம்மைவிட்டு பறிபோய்விடும் என்பதனை ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

மற்றும் அரசாங்கத்தேடு சேர்ந்து தமது ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கான அபிவிருத்தி அபிவிருத்தி என்று மக்களை ஏமாற்றி இருக்கின்ற தாயக பூமியினை இழக்கச்செய்து அரசியல் இலாபம் தேடாமல் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அக்கறை காட்டுவார்களேயானால் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தங்களது சொந்த இடங்களில் வாழ்வதற்கு வழியேற்படும் எனவும் கூறினார்.

Comments
Loading...