தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சச்சின் தெண்டுல்கர் சுயசரிதை புத்தகம் வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் சுயசரிதை புத்தகத்தை நேற்று வெளியிட்டார்.

‘இந்திய கிரிக்கெட்டின் கடவுள்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் 41 வயதான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இது 416 பக்கங்களை கொண்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த புத்தகம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

முன்னதாக புத்தகம் வெளியீட்டு விழா மும்பையில் நேற்றிரவு நடந்தது. விழாவிற்கு வயதான தனது தாயார் ரஜ்னியை அழைத்து வர முடியாது என்பதால் அவரது கையில் முதல்பிரதியை வழங்கி ஆசி பெற்ற தெண்டுல்கர், பின்னர் அந்த புத்தகத்தை கொண்டு வந்து விழா மேடையில் வெளியிட்டார். முதல் பிரதியை அவரது ஆரம்ப கால பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர் பெற்றுக் கொண்டார். தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, சகோதரர் அஜீத் தெண்டுல்கர், முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தெண்டுல்கர் பேசும் போது, ‘எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் இருந்தே அதற்கான பணியை தொடங்கி விட்டேன். புத்தகத்தை எழுதி முடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். இதை ரசிகர்கள் படித்து உற்சாகமடைவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் புத்தகத்தில் எழுதியுள்ள விஷயங்கள் குறித்து தெண்டுல்கர் கூறியதாவது:-

2004-ம் ஆண்டு முல்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நான் 194 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளேர் செய்த விவகாரம் குறித்து என்னிடம் இப்போதும் கேட்கிறார்கள். களத்தில் நடந்த அந்த விஷயத்தை உடனடியாக முடித்து விட்டோம். அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக இன்று வரை நானும், ராகுல் டிராவிட்டும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்ற வீரர்களுடன் ஏதாவது ஒரு வகையில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

2007-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக டிராவிட்டை நீக்கி விட்டு என்னை கேப்டன் பதவியை ஏற்கும்படி அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என்னிடம் சொன்னது உண்மை தான். அப்போது எனது மனைவி அஞ்சலியும் உடன் இருந்தார். ஆனால் இந்த விஷயத்தை நான் டிராவிட்டிடம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் சேப்பலின் யோசனையை நான் ஏற்கவில்லை. எனவே அத்துடன் இந்த விஷயம் முடிந்து விட்டதாக நினைத்தேன்.

எந்த விஷயமாக இருந்தாலும் 100 சதவீதம் எனக்கு தெரிந்தால் மட்டுமே அது பற்றி சொல்வேன். ஆனால் சூதாட்ட விவகாரங்கள் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அது போன்ற சமயத்தில் அது குறித்து கருத்து சொல்வது முட்டாள்தனமானது.

சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் போது(2008-ம் ஆண்டு) ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் குரங்கு என்று இனவெறியுடன் திட்டியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ஹர்பஜன்சிங்குக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது நானும், கேப்டன் கும்பிளேயும், ஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்படாவிட்டால் தொடரை புறக்கணிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்தோம்.

அந்த சம்பவத்தின் போது, சைமண்ட்ஸ் தொடர்ந்து ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ஹர்பஜன்சிங்கும் பதிலடி கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இருவரும் வாக்குவாதம் செய்தனர். நான் உடனடியாக ஹர்பஜன்சிங்கை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது அவர் சைமண்ட்சை நோக்கி தேரி மாகி (உங்க அம்மா) என்று சொல்வதை கேட்டேன். இந்த வார்த்தை கோபத்தை வெளிப்படுத்த வடஇந்தியாவில் பயன்படுத்தும் வார்த்தை. இந்த சர்ச்சையால் அந்த தொடர் ஏறக்குறைய பாதியில் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது.

இது போன்ற நிறைய தகவல்களை புத்தகத்தில் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் தெண்டுல்கர் பற்றிய மலரும் நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர்.

அஞ்சலி (மனைவி): விமான நிலையத்தில் எனது தாயாரை அழைத்துச் செல்ல வந்த போது முதல் முறையாக தெண்டுல்கரை சந்தித்தேன். அழகாக, வசீகரமாக இருப்பதாக அவரை பற்றி நினைத்தேன். அப்போது அவர் ஒரு கிரிக்கெட் சாதனையாளர் என்பது எனக்கு தெரியாது.

சவுரவ் கங்குலி: ஒரு முறை சென்னை எம்.ஆர்.எப். பவுண்டேஷனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நான், தெண்டுல்கர் உள்ளிட்டோர் ஒரே அறையில் படுத்திருந்தோம். அப்போது இரவில் தெண்டுல்கர் திடீரென அறையில் நடந்து கொண்டிருந்தார். முதல் நாளில் அதை சாதாரணமாக விட்டு விட்டேன். மறுநாளும் அவர் அதே போன்று எழுந்து நடந்தார். அப்போது தான் அவருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.sachin

வெங்சர்க்கார்: அப்போது நான் மும்பை அணியின் கேப்டனாக இருந்தேன். தெண்டுல்கரின் பேட்டிங் குறித்து நிறைய கேள்விபட்டிருந்தேன். வாசு பரன்ஜாப் அவரை அழைத்து வந்து என்னிடம் அறிமுகப்படுத்தி, அவர் பேட் செய்வதை பார்க்க செல்லும்படி கூறினார். இப்போது அது முடியாது என்றேன். ஆனால் வாசு என்னை கட்டாயப்படுத்தினார். பிறகு நான் எனது 100-வது டெஸ்டையொட்டி சி.சி.ஐ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது நான் கபில்தேவ், மனீந்தர் ஆகியோரிடம் தெண்டுல்கருக்கு பந்து வீசும்படி கூறினேன். அந்த இளம் வயதிலும் அவர் இவர்களின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார். அதன் பிறகு நான் மும்பை தேர்வாளர்களிடம் 15 பேர் கொண்ட அணியிலாவது இவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் அடுத்த மூன்று நாட்கள் தெண்டுல்கர் வரவே இல்லை. அது பற்றி வாசுவிடம் கேட்ட போது, பரீட்சை எழுத சென்றிருப்பதாக கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

Comments
Loading...