தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நலன்புரி முகாம் காணியை தங்கியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சி

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு, அவர்கள் தற்போது குடியிருக்கும் காணிகளை பகிர்ந்தளிக்க இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களின் வாயை அடைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது.mallakam_camp

நேற்று சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் காணியை அளவீடு செய்யவென தனியார் நில அளவையாளர்கள் சகிதம் 515 படைப்பிரிவை சேர்ந்த படையினருடன் சுதந்திரக் கட்சியின் உள்ளுர் முகவரொருவரும் களத்தில் இறங்கியிருந்தார். இதற்கு முகாமிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோருக்கு தகவல் வழங்கியிருந்தனர். அதையடுத்து அங்கு சென்றிருந்த அவர்களும் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

எனினும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரோ தமக்கும் அளவீட்டு பணிகளிற்கும் தொடர்புகள் இல்லையெனவும் பலாலியிலிருந்து சென்ற படையினரே அளவீடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான காணியையே இடம்பெயர்ந்த மக்களிற்கு பங்கிட்டு வழங்க முயற்சிகள் நடந்துள்ளது. வலி.வடக்கு நிலத்தை முழுமையாக கையகப்படுத்த ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...