தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எபோலா நோய் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு

எபோலா நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மருந்து, முதல் கட்ட சோதனையின் போது மனித உடலில் வெற்றிகரமாகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையம், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து எபோலா நோய் தடுப்பு மருந்தொன்றை உருவாக்கின.

இந்த மருந்து 20 ஆரோக்கியமான நபர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் உடலில் அந்த மருந்து, போதிய அளவிலான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது என்பது ஆய்வில் தெரிய வந்தது.ebola1

இது குறித்து, அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையத்தின் இயக்குநர் ஆன்டனி ஃபாக்கி கூறுகையில், முன்னெப்போதையும் விட, எபோலா நோய் மிகப் பெரிய அளவில் பரவியுள்ளது. வருங்காலத்தில் இது போன்ற நிலை உருவாகாமலிருக்க இந்த மருந்து உதவும்.

முதல் கட்ட சோதனையின்போது, மனித உடலில் இந்த தடுப்பு மருந்து போதுமான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்கிற சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதையடுத்து, மேலும் பரவலான அளவில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட வேண்டும் என்றார்.

எபோலா தடுப்பு மருந்து குறைந்த அளவில் 10 பேருக்கும், கூடுதலான அளவில் 10 பேருக்கும் அளிக்கப்பட்டது. முதலில் இரு வாரங்களுக்குப் பிறகும், பின்னர் நான்கு வாரங்களுக்குப் பிறகும் போதிய அளவில் நோய் எதிர்ப்புச் சக்தி அவர்கள் உடலில் உருவாகியுள்ளதா என்று அறிய அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அனைவரது உடல்களிலும் போதிய அளவு எதிர்ப்புச் சக்தி உருவானது தெரிய வந்தது. இந்த ஆய்வு விவரம் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ எனும் ஆய்வேட்டில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

Comments
Loading...