Designed by Iniyas LTD
ஜெப்ரி பெல்ட்மன் – சிவிவி சந்திப்பு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐநா மன்றத்தின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், ஐநாவின் இலங்கை தொடர்பான அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் நிச்சயமாக மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து வடமாகாணத்தின் அரசியல் நிலைமைகள், மக்களுடைய மன நிலைகள் என்பவற்றை அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
இலங்கை தொடர்பான அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு, அது பின்போடப்பட்டமையானது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியபோது, வரும் செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்கப்படும் என பெல்ட்மன் தன்னிடம் உறுதியளித்திருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம், வடமாகாண சபையினால் ஏன் இந்த சந்தர்ப்பத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் ஐநா மன்ற உயரதிகாரி ஜெப்ரி பெல்ட்மன் விளக்கமாகக் கேட்டறிந்தார் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று அறிவித்ததையடுத்து, தமிழ் மக்களின் மன நிலை, அவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், அவர்கள் இது கால வரையில் அனுபவித்துள்ள கஷ்ட நிலைமைகள் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலேயே இனப்படுகொடுகொலை தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக ஐநா அதிகாரிகளுக்குத் தாம் விளக்கிக் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது வடபகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக ஐநா அதிகாரி ஜிப்ரி பெல்ட்மனிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பின்போது, வடமாகாண அமைச்சர்களாகிய டாக்டர் சத்தியலிங்கம், குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.