Designed by Iniyas LTD
நெதர்லாந்து ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானப்படை அதிகாரிகள் உயிரிழப்பு
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை ஏற்றிச் சென்ற நெதர்லாந்து ஹெலிகொப்டர் ஒன்று வடக்கு மாலியின் காவே பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இடம்பெற்றதன் உண்மைத் தன்மையை நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ பயிற்சியில் ஈடுபட்ட குறித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறங்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக மாலியில் உள்ள ஐ.நா படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐ.நா அமைதி காக்கும் படையினர் பயணித்த இந்த ஹெலிகொப்டர் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளிவருவதாகவும் அவை பொய்யான வதந்திகள் என்றும் நெதர்லாந்து படைத் தலைமை அதிகாரி ஜென் ரொம் மிடென்டோர்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் இது விபத்து என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாலியில் நிலைகொண்டிருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மினுஸ்மா நடவடிக்கையில் பங்கேற்றிருந்த ஐ.நாவின் அமைதிக்கான படையினரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்திற்காக காரணம் தொடர்பில் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நெதர்லாந்து படைத் தலைமை அதிகாரி ஜென் ரொம் மிடென்டோர்ப் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.