Designed by Iniyas LTD
ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக ஆளுநர் ரோசய்யாவை 15 நிமிடம் சந்தித்து பேசினார். பிறகு ஆளுநரிடம் சட்டப்பேரவை தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை அளித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவரான ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் 1.28 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். அவர் செல்லும் வழியெங்குமுள்ள அதிமுக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பிறகு கோட்டூர்புரத்தில் இருந்து ராஜ்பவன் நோக்கி ஜெயலலிதாவின் வாகனம் சென்றது. அவரை நான்கு வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றன. போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தது ஜெயலலிதாவை வரவேற்றனர்.
பின்னர், ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜெயலலிதா சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கினார். ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பதவியேற்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.
போயஸ் தோட்டம், அண்ணா சாலை மற்றும் ஆளுநர் மாளிகை பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பின் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, கிண்டி, சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வருகிறார். எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மீண்டும் அண்ணாசாலை வழியாக சென்று, அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு போயஸ் தோட்டம் வீட்டிற்கு திரும்புகிறார்.