Designed by Iniyas LTD
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் குடியிருப்புகள்: அரசுக்கு அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அனுமதியின்றிக் கட்டும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை இடிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூரு பனசங்கரிப் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் சுவாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:
கோவை அருகிலுள்ள சுண்டக்காமுத்தூரிலும், மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள மதுக்கரை கிராமத்தின் காப்புக்காடுப் பகுதியிலும் 960 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. இதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெறப்படவில்லை. நகர ஊரமைப்புத் துறை, சுற்றுச்சூழல் வனத்துறை ஆகியவற்றிடமும் ஒப்புதல் பெறவில்லை. வன உயிரியல் பாதுகாப்புச் சட்டமும் மீறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரியபோது, சுண்டக்காமுத்தூரில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கவே இல்லை என்று நகர ஊரமைப்புத் துறை பதில் அளித்தது.
எனவே, இங்கு கட்டடம் கட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கட்டிய கட்டடங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
மேலும் இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மேற்குத் தொடர்ச்சி மலை அருகிலும், சுண்டக்காமுத்தூரிலும் உரிய அனுமதியின்றி ரூ. 40 கோடி மதிப்பில் 960 அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளித்த அரசு, வழக்கில் கூறப்பட்ட உண்மையை ஏற்றுக் கொண்டது. ஆனால், இதற்குத் தேவையான அனுமதியைப் பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவது தொடர்பாக, அரசு அனைத்து விதிகளையும் மீறியுள்ளது. அரசே விதிகளை மீறியிருக்கக் கூடாது. பல்வேறு அதிகாரப்பூர்வ அதிகாரிகளும், உரிய அனுமதியைப் பெறாமலே இந்தக் கட்டடங்களைக் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இது மிகுந்த கண்டனத்துக்குரியது. எனவே, முறைப்படிச் செய்ய வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகே இந்தக் குடியிருப்பைப் பயன்படுத்த வேண்டும். மனுதாரர் நீதிமன்றத்தை அணுகிய பிறகே அரசு விழித்துள்ளது. இதற்காக மனுதாரர் செலவுத் தொகையை ஈடு செய்ய வேண்டும். எனவே, மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரத்தை அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.