Designed by Iniyas LTD
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு உதவி செய்யும் வறுமை ஒழிப்பு திட்டம்: தே.மு.தி.க அறிவிப்பு
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு உதவி செய்யும் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தே.மு.தி.கவினர் அறிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–
“இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரவர்களுடைய சக்திக்கேற்ப ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து, வறுமை ஒழிப்பை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தி வருகிறோம் என்பது நாடறிந்த உண்மை.
கடந்த 2012ஆம் ஆண்டைப் போலவே, இந்த 2015ஆம் ஆண்டும் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி “மக்களுக்காக மக்கள் பணி” என்ற மகத்தான வறுமை ஒழிப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செயல்படுத்த உள்ளோம்.
அதில் தலைவர் விஜயகாந்த் – பிரேமலதா கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமை கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.