தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய றோலர்களின் அத்துமீறல் தொடர்பில் ஆய்வு!

Rupavathi Ketheeswaran_CI copyஇந்திய றோலர்களின் அத்துமீறல்கள் தொடர்பான தகவல்களை, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படை, இராணுவம் ஆகியோருக்கும் இடையில் பரிமாறிக்கொள்வதற்கான தொடர்பாடலை உருவாக்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கிடையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் இந்திய றோலர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதன் ஊடாக எமது கடல்வளம் சுரண்டப்படுகின்றது. இதனால், எமது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடற்றொழிலாளர்களுக்கும், கடற்படை, இராணுவம் என்பவற்றுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவகையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்திய றோலர்கள் எமது கடலில் அத்துமீறி நுழைகின்றபோது எமது கடற்றொழிலாளர்கள் சட்டத்தினை கையிலெடுக்கக்கூடாது. தகவல்கள் கிடைக்கின்றபோது இராணுவத்தினருக்கோ கடற்படையினருக்கோ தெரிவிக்கக்கூடிய விதத்தில் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்திய றோலர்களை எமது கடற்பரப்பில் காணுகின்றபோது தகவல்களை வழங்கக் கூடியவகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் வரவேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் கடற்றொழில் சிறப்பாக இடம்பெற்று கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயருமென முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் இக்கலந்துரையாடலில் கடந்த காலம் பற்றியல்லாது எதிர்காலத்தில் எமது கடல்வளத்தினை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பாக என்பது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்திய றோலர்களினால் நெருக்கடி வராதென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Comments
Loading...