Designed by Iniyas LTD
திமுகவுடன் கூட்டணி இல்லை – இல. கணேசன்
பாஜக மக்கள் நலக் கூட்டணி மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கூறியுள்ளார்.
பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமையன்று தமிழகம் வந்தார். பாஜக கூட்டணியை அவர் முடிவு செய்யப்போவதாக கூறப்பட்டது. பல்வேறு சிறிய கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஞாயிறன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அவர் சந்தித்தார். எனினும் கூட்டணி குறித்து அந்த கட்சியால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே ஜவடேகர் ஞாயிறன்று தில்லி புறப்பட்டுச் சென்றார். விஜயகாந்துடன் பேசியது குறித்து பாஜக தலைமையிடம் தெரிவிக்க இருப்பதாகவும் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும் ஜவடேகர் கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “அதிமுக இன்னமும் கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை. நாங்கள் கதவை இன்னமும் சாத்தவில்லை என்று கூறிய அவர் அதற்கு மேல் ஒன்றும் கூறவில்லை. மக்கள் நலக் கூட்டணி மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று மட்டும் கூறினார். ஜவடேகர் மீண்டும் தமிழகம் வரும்போது கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என்றார் அவர்.