Designed by Iniyas LTD
எமது பெண்கள் சுதந்திரத்தோடு வீதியில் செல்ல வேண்டும்!
எமது பெண்கள் சுதந்திரத்தோடு வீதியில் செல்லும் காலம் மீண்டும் வர வேண்டும் என மனிதவுரிமை செயற்பாட்டாளர் சுனேஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்..
சர்வதேச மகளீர் தினமாகிய இன்று (08.03.2016) அனுசரிக்கும் இந்த நாளில் தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று நாடெங்கிலும் அமைதியான முறையில் கொண்டாடப்படுகின்றது.
ஒரு நாடு, ஓர் இனம், ஒரு கிராமம் அல்லது ஒரு குடும்பம் நல் வழியில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் ஒரு பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது.
பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த செயற்பாடாக அமைகிறது.
துரித கதியில் சமூகம் மாறுபட்டுக் கொண்டிருப்பினும் அதற்கு ஒருங்கிணைந்தவாறாக பெண்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்களும் நம்பிக்கைகளும் மாறுபடுகின்றது என்பது இன்று விவாதத்திற்குரிய விடயமாகும்.
பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பாலியல் வல்லுறவுகள், உள ரீதியிலான தாக்கங்கள், கொலைகள் போன்றவற்றை அதிகமாக தாய்குலமே எதிர்நோக்குகின்றது. அதிலும் இந்த கொடூரத்திற்கு மிகவும் இலகுவாக ஆளாகுவது பெண் பிள்ளைகளும் சிறுவர்களும் என்பது யாவரும் அறிந்த விடயமாக காணப்படுகின்றது.
யுவதியாகவும், மனைவியாகவும், தாயாகவும் சமூகத்தில் பாரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ள பெண்களுக்கு சிறுவயதிலேயே இவ்வாறான அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பெண் பிள்ளைகளையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் செயற்பாடுகளை தேசிய கடமையாகக் கொண்டு நடவடிக்கைகளை இந்த நல்லெண்ண அரசாங்கமும், சிறுவர், பெண்கள் வெளிவிவகார அமைச்சும் இனைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக உள்ளது.
பெண்களுக்கு எதிராக நாளாந்தம் நாடு பூராவும் கேள்விப்படுகின்ற வல்லுறவு களையும், துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்தினை இந்த புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்து நிற்கின்றேன்.
பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பொருத்தமான சமூக கட்டமைப்பையும் நோக்கத்தையும் அடையும் போது, உரிமைகளையும், பொறுப்புகளையும் வென்றெடுத்து, பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி மென்மேலும் உறுதியுடனும், ஒழுங்கமைப்புடனும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.
சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கின்ற பெண்கள் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக பாரிய பங்காற்றி வருகின்றனர்.
தாயக மற்றும் ஸ்ரீலங்கா பெண்களின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் தியாக உணர்வுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பணிப் பெண்களாக சென்று கடுமையாக பாடு பட்டு தங்கள் உதிரத்தையே வியர்வையாக வெளியிட்டு நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையான வெளிநாட்டு நாணயமாற்றை சம்பாதித்து கொடுக்கிறார்கள்.
இந்தப் பெண்கள் மேற்கொள்ளும் தியாகத்தினால் அவர்களின் குடும்பம் எதிர்பார்த்த அளவு நன்மை அடைவதில்லை.
தனது கடுமையான உழைப்பின் மூலம் அந்தப் பெண் அனுப்பி வைக்கும் பணத்தை கணவன் குடித்தும், கூத்தாடியும், இன்னும் சில இளைஞர்கள் போதைவஸ்துக்கும், சூதாட்டத்திற்கும்,இன்னும் பலர் ஆடம்பர அழகு பொருட்கள் வாக்கவும் செலவழித்து வருவதனை நிச்சயமாக சுட்டிக்காட்டிதான் ஆக வேண்டும்.
இவ்வாறு இவர்கள் செய்வதனால் அந்த குடும்பத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் பிள்ளைகளின் கல்வியும் சீர்குலைந்து போகின்றது. இவ்விதம் தியாகங் களை செய்து இளமைக் காலத்தை வெளிநாடுகளில் பணிப்பெண்களாக பணி புரிந்து வயோதிபத்தை எட்டும் போது நாடுதிரும்பும் இந்தப் பெண்களுக்கு நாட்டில் எவ்வித சேமிப்பும் இருப்பதில்லை.
குடியிருப்பதற்கு வீடுகளும் இல்லாத நிலையில், பிள்ளைகளும் சீர்குலைந்து சமூகத்திற்கு ஒரு பெரும் பாரமாகவே மாறியிருப்பார்கள்.
இவ்விதம் நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடும் தாய் குலம் இறுதியில் வாழ்க்கையில் எவ்வித வசதியும் இன்றி செல்லாக்காசாகி மரணிக்கின்ற சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு சமமான இடத்தை சமூகத்திலும், அரசியலிலும் பெற்றுக் கொடுக்க இந்த புதிய நல்லிணக்க அரசாங்கமும், சிறுவர், பெண்கள் விவகார அமைச்சும் துரித நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய தரப்பினரை வேண்டி நிற்கின்றேன்.
பெண்களுக்கு சுய தொழில், சமவருமான வழிகளை மேம்படுத்துவதுடன் மகளிர் தொழில் முயற்சி நிதி ஒன்றையும் உடனடியாக இந்த புதிய அரசு ஆரம்பிக்க வேண்டும்.
ஒரே தொழிலை புரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் பெற்றுக் கொடுப்பதையும் புதிய அரசு உறுதிப்படுத்தி நடமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து நிற்கின்றேன்
வடக்கு, கிழக்கில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் வன்முறைகள் இயற்கை அனர்த்தங்களினால் பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.
எனவே, அந்தக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் இந்த விடயத்தில் கெளரவ ஜானாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் கூடிய கவனம் எடுத்து செயற்பட வேண்டும்.
இதே வேளை தற்போது வட கிழக்கிலே அதிகரித்து காணப்படும் பிரச்சினைகளில் ஒன்றுதான் பாலியல் துஸ்பிரயோகம், மற்றும், கொடுமைகள், பாலியல் வல்லுறவு, மற்றும் மரணங்கள்
ஆனால் இவ்வாறு நடக்கின்ற போது இந்த கொடுர வேலைகளை செய்கின்றவர்களுக்கு இற்ற வரைக்கும் எவ்விதமான உயரபட்ச தண்டனைகளோ அல்லது தீர்ப்புகளோ வழங்காமல் மெளனம் காப்பது பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு பின்னரான மரணம் எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக அரசாங்கம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.
எனவே இந்த நல்லிணக்க அரசாங்கமும், சிறுவர், பெண்கள் விவகார அமைச்சும் வட, கிழக்கு,தெற்கு பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உடனடியாக சட்டத்தினை நிலைநாட்டி செயற்படுத்த முன்வர வேண்டும்.
இதை விட இன்று வட கிழக்கு, தெற்கு பகுதிகளில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள், துஸ்பிரயோகங்கள் போன்ற விடயங்களுக்குரிய நீதிமன்ற தீர்ப்புகளிலும் நீண்ட காலம் இழுத்தடிப்பு நிலைகாணப்படுகின்றது
இத்தகைய பின்னணியில் இனிவரும் காலங்களில் உடனடியாக பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுடன் அடுத்த வருடங்களில் பெண்ணுரிமை மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவும், வடகிழக்கு, தெற்கு பகுதியில் சமிபகாலத்தில் நடைபெற்ற சகல பாலியல் வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், மரணங்களுக்கான சரியான அதி உச்ச தீர்ப்பினை நீதிமன்றம் ஊடாக புதிய அரசாங்கம் வழங்கி பெண்கள், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பெண்கள், சிறுவர்கள் நிம்மதிதாகவும், பாதுகாப்பாகவும் சமூகத்தில் ஓங்கி நின்று சமூகத்திற்காக பாடுபட இந்த 2016ம் ஆண்டு உலக பெண்கள் தினத்தில் ஸ்ரீலங்கா அரசிடம் எனது கோரிக்கையை விடுக்கிறேன். என மனிதவுரிமை செயற்பாட்டாளரான சுனேஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.