Designed by Iniyas LTD
இந்திய அணியில் ரோஹன் போபண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் 2 ஆண்டுகளுக்குப் பின் ரோஹன் போபண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தூரில் ஜனவரி 31-ம் தேதி தொடங்கவுள்ள டேவிஸ் கோப்பை தொடரில் ஆசியா/ஓசியானா குரூப் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதில் பங்கேற்கும் 6 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
லியாண்டர் பயஸ், சொந்த காரணங்களுக்காக டேவிஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார். தன் கடைசி டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட மகேஸ் பூபதிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் உள்ள வீரர்களில் போபண்ணா மட்டுமே அனுபவம் வாய்ந்தவர்.
லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ்டன் ஜோடி சேர்வது தொடர்பாக எழுந்த பிரச்னைக்குப் பின், போபண்ணா மற்றும் பூபதி ஆகிய இருவருக்கும் இந்திய டென்னிஸ் சங்கம் தடை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். வீரர்கள் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்தது.
போபண்ணா கடைசியாக 2012-ல் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக டேவிஸ் கோப்பை போட்டியில் ஆட உள்ள சாகேத் மைனேனி, இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் ஜோடி சேரவுள்ளார். மைனேனி, ரஷியாவைச் சேர்ந்த கரண் கச்சனோவுடன் ஜோடி சேர்ந்து சென்னை ஓபன் தொடரின் காலிறுதியில் போபண்ணா, குரேஷி ஜோடியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஒற்றையர் பிரிவு: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல்தர வீரரான சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி ஆகியோர் இந்திய அணியை வழி நடத்துவர். அனில் துபர் தலைமையிலான தேர்வுக் குழு, ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் சனம் சிங் ஆகியோரை ரிசர்வ் வீரர்களாகத் தேர்வு செய்துள்ளது. சென்னை ஓபன் முதல் சுற்றில் சோம்தேவைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்த ராம்குமார் ராமநாதன் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
தரவரிசையில் மைனேனியை (318) விட ஜீவன் நெடுஞ்செழியன் (314) முன்னணியில் இருந்தபோதிலும் தேர்வுக்குழு மைனேனிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அனில் துபர் பதிலளிக்கையில் “”ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவிலும் சிறப்பாக ஆடும் வீரர் என்ற முறையில் மைனேனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தரவரிசையில் பெரிதாக வித்தியாசம் இல்லை. இரட்டையர் பிரிவு போட்டிகளில் ஜீவனை விட மைனேனி நன்றாக விளையாடி வருகிறார். மகேஷ் பூபதியை சேர்ப்பது குறித்து ஆலோசித்தோம். ஆனால், அவர் இப்போதே பாதி ஓய்வு பெற்று விட்டார்” என்றார்.
அணி விவரம்: சோம்தேவ், யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா, சாகேத் மைனேனி, ரிசர்வ்: ஜீவன் நெடுஞ்செழியன், சனம் சிங். சிறப்பு அழைப்பாளர்: ராம்குமார் ராமநாதன்.