தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக அரசு அளிப்பது அம்மா அரிசி அல்ல; மோடி அரிசி: பிரகாஷ் ஜாவடேகர்

prakashதமிழக அரசு வழங்குவது “அம்மா’ அரிசி அல்ல, மோடி அரிசி என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

 போடி தொகுதி பாஜக வேட்பாளர் வீ.வெங்கடேஷ்வரனை ஆதரித்து போடி திருவள்ளுவர் சிலை முன் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

 திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து இலவசங்களை கொடுத்தனவே தவிர இளைஞர்களுக்கு வேலை தரவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு தருவோம்.

 தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசி கொடுத்து அதை அம்மா அரிசி எனக் கூறுகின்றனர். ஆனால், அதற்கு ரூ. 32 மானியமாக மத்திய அரசு தருகிறது. மாநில அரசு ரூ. 3 மட்டுமே தருகிறது. எனவே அது “அம்மா’ அரிசி அல்ல. பிரதமர் மோடி அரிசி என்றுதான் கூற வேண்டும். நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு இணையவழி சேவைகளை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் அகண்ட அலைவரிசை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

 போடி பகுதியில் குரங்கனி டாப் ஸ்டேசன் மலைச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று அதற்கான விண்ணப்பம் அளித்தால் நான் உடனே நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

 பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப்படுத்த 28 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரும் கடிதம் எதுவும் தனக்கு தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்றார்.

Comments
Loading...