தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்! உதவாத தமிழ் அரசியல்வாதிகள்! அவலத்தில் போராளிகள்!

former-ltteஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்து அவதிப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உதவிகோரியுள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த தேவராஜா கணேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் முன்னாள் போராளியாவார்.
தனது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் தொழில் எதுவும் செய்ய முடியாது வருமானம் இன்றி சிரமங்களை எதிர்நோக்குகின்றார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்த இவர், 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டு தனது இரண்டு கண் பார்வையையும் இழந்துள்ளார்.
 
2010ஆம் ஆண்டு மீள்குடியேறிய இவரது குடும்பத்தினர், அப்போது வழங்கப்பட்ட தற்காலிக வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமது நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்தி செய்துவந்தனர்.
ஆனாலும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு பெரும் அல்லலுறுவதாக தெரிவிக்கின்றார் கணேஸ்வரன்.
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை. ஆகவேதான் நிரந்தரமாக வருமானம் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளை தொண்டு நிறுவனங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவியாக மாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாடுகளைப் பராமரிக்கக்கூடிய வசதிகள் மற்றும் தீவனம் ஆகியவற்றை பெறுதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அவற்றைப் பெறுவதற்கு நிதி தேவைப்படுகின்றது.
இதேவேளை சுயமாக தொழில் செய்வதாயின் அதற்கான மூலதனம் அவசியம் ஆனால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள கணேஸ்வரனை போன்ற முன்னாள் போராளிகளுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வருவதில்லை.
திருமணமான பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் இவருக்கு வீடொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது. எனினும் அந்த வீடு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நிதி இவரிடம் இல்லை.
தமிழ் மக்களது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலும் வடமாகாண சபையிலும் பதவிவகிக்கும் அரசியல்வாதிகள் இவர்களைப் போன்ற முன்னாள் போராளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்வதில்லை.
அரசாங்கம் உதவி செய்யாதுவிட்டாலும் கிடைக்கும் நிதியைக் கொண்டு அல்லது வேறு பொது அமைப்புகள் மற்றும் தனவந்தரிடம் நிதியைப் பெற்று உதவிசெய்யும் மன நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் இல்லை என்பதுதான் கணேஸ்வரன் போன்றவர்களின் ஆதங்கமாகவுள்ளது.
Comments
Loading...