Designed by Iniyas LTD
ஜிம்பாவே சுற்றுப்பயணத்தில் இந்தியா வெற்றி!
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே இந்திய அணி 9 விக்கெட் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது. நேற்று நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை எளிதாக பறித்த இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. ஏற்கனவே 2013-ம் ஆண்டு (5-0), 2015-ம் ஆண்டு (3-0) நடந்த தொடர்களிலும் இந்திய அணி ஜிம்பாப்வேயை ‘ஒயிட்வாஷ்’ செய்தது நினைவிருக்கலாம்.
சாதனை துளிகள்
* ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைப்பது இது 6-வது நிகழ்வாகும். ஜிம்பாப்வேக்கு எதிராக 2-வது முறையாகும்.
* முழுக்க முழுக்க ஒரு தரப்பாக அமைந்த 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. ஆனால் சொந்த மண்ணில் ஆடிய ஜிம்பாப்வே மூன்று ஆட்டங்களிலும் ஒரு விக்கெட்டை கூட தக்க வைக்க முடியாமல் ஆல்-அவுட் ஆனது கவனித்தக்க அம்சமாகும்.
* இந்திய கேப்டன் டோனிக்கு 9 ஆயிரம் ரன்களை தொடுவதற்கு 82 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த தொடரின் போது அவர் இச்சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
* இந்திய விக்கெட் கீப்பர் 34 வயதான டோனி, சிகும்புரா வழங்கிய கேட்ச்சை பிடித்த போது, புதிய மைல்கல்லை எட்டினார். அவர் விக்கெட் கீப்பராக இதுவரை 350 பேரை (261 கேட்ச் மற்றும் 89 ஸ்டம்பிங்) அவுட் ஆக்கி வெளியேற்றி இருக்கிறார். தனது 278-வது ஆட்டத்தில் இச்சாதனையை படைத்துள்ளார். விக்கெட் கீப்பராக அதிகம் பேரை அவுட் ஆக்கியதில் டோனிக்கு முன்பாக முதல் 3 இடங்களில் இலங்கையின் சங்கக்கரா (482), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472), தென்ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (424) ஆகியோர் உள்ளனர்.