Designed by Iniyas LTD
கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது – சிவசக்தி ஆனந்தன்
காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்துப்படி இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
‘கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தபட்டமைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. ஆனாலும் மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில் இவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டாலும் கூட சர்வதேச சட்டத்துக்கு அது முரணானது இல்லை’ என்றும் பரணகம கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் மூலம் கொத்தணிக் குண்டுகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஹோமியோபதி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஹோமியோபதி சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது அரசியலமைப்பிற்கு அமைவாக நிராகரிக்கப்பட்டுள்ளதாககவும், அதனை உயர்நீதிமன்றம் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
தொடர்புடைய பதிவு
இந்த விவாதத்தில் அவர், தொடர்ந்து பேசுகையில், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது. உண்மையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு இருந்தால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி நாட்டின் சகல மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
‘கோட்டா முகாம்கள்’ என்ற பெயரிலும் சித்திரவதை முகாம்கள் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டியபோதும், அவை மறுக்கப்பட்டன. எனினும், ஐ.நா அதிகாரிகள் இங்கு வந்தபோது அவற்றை பார்வையிட்டிருந்தனர். இதுபோன்ற விடயங்களில், அரசு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவதே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனக் கூறியவர், சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. எனினும், வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளைத் திருத்துவதற்காக கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வட்டி அறவிடப்படுகிறது.
இவ்வாறான பக்கச்சார்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் திருத்த அரசாங்கம் இலவச உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.