தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும், எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  protest

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின், 4ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.  இந்த ஆர்ப்பாட்டமானது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு – வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அன்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க முன்வர வேண்டும் என்றும்,  அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் கேட்டுக் கொண்டார்

Comments
Loading...