Designed by Iniyas LTD
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை பொது இடத்தில் கொல்ல வேண்டும்: அமைச்சர் கபில் மிஸ்ரா ஆவேசம்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளை போல நடத்துவதுடன், அவர்களை பொது இடத்தில் வைத்து கொல்ல வேண்டும் என தில்லி கலாச்சாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷகரில் சில தினங்களுக்கு முன் கொள்ளை கும்பலால் தாய்-மகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவத்தை சுட்டிக்காட்டி, கபில் மிஸ்ரா சுட்டுரையில் (டுவிட்டர்) புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தலைநகரில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 450 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அதனை மாற்றிக கொண்டுள்ளேன்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர், பயங்கரவாதிகள் போன்றவர்கள். அவர்களை பொது இடத்தில் வைத்து கொலை செய்வதன் மூலம் யாரும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.
பெண்களுக்கு ஆயுதங்களும், அதனை கையாளும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். தங்களை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் நபர்களை கொல்லும் உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஒரு சிறப்புச் சட்டத்தை, நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.
பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோர் சிறுவராக இருந்தாலும் சரி, அவர்களை பெரியவர்களாக கருதி தண்டனை வழங்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரின் முகத்தையோ, இதர விவரங்களையோ மூடி மறைப்பதை விட்டுவிட்டு, அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.