Designed by Iniyas LTD
அம்மா திட்டமுகாமில் அ.தி.மு.க.–தி.மு.க.வினர் மோதல்
சேலையூரில் நடைபெற்ற அம்மா திட்டமுகாமில் அ.தி.மு.க.–தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் தாம்பரம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.
இதில் தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்ட வசதிகளை அ.தி.மு.க.வினர் செய்து இருந்தனர். முகாமில் கலந்து கொள்ள அ.தி.மு.க. தாம்பரம் நகர செயலாளர் கூத்தன் தலைமையில் நகராட்சி துணைத்தலைவர் கோபிநாதன் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர். அப்போது அ.தி.மு.க.–தி.மு.க.வினர் இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அம்மா திட்டமுகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்தின் அங்கு வந்தார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரும் அங்கு வந்தனர்.
அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பினர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதற்குள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கே.என்.ராமச்சந்திரன் எம்.பி. வழங்கினார். அதன் பிறகு அ.தி.மு.க. நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘தமிழக முதல்–அமைச்சர் பெயரில் அம்மா திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி பயனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவாய்த்துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசில் அம்மாவின் திட்டத்தில் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
தி.மு.க.வினர் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக கோஷம் எழுப்பி ரகளை செய்தனர். திட்டத்தை குறை சொல்பவர்கள் வெளியேறலாம் என்றேன். அம்மா திட்ட முகாம் சிறப்பாக நடைபெறுவதால் அதில் இடையூறு ஏற்படுத்தவே தி.மு.க.வினர் இந்த செயலில் ஈடுபட்டனர்’’ என்றார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ‘‘வருவாய்த்துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில் தாம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டேன். இந்த முகாமில் 4 பேருக்காவது நலத்திட்ட உதவி போய் சேர்ந்தால் மகிழ்ச்சி. அதுவரை இங்கு இருப்பேன் என்றேன். உடனே அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
எத்தனை பேரிடம் மனுக்கள் பெற்றனர். எத்தனை பேருக்கு நலதிட்டம் வழங்கப்பட்டது என்ற எந்த விவரமும் தெரிவிக்காமல் அதிகாரிகள் சென்று விட்டனர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அரசின் அனைத்து முகாம்களிலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொள்வேன்’’ என்றார். இந்த மோதல் சம்பவத்தால் சேலையூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது