Designed by Iniyas LTD
பாமக உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் : ஜி.கே.மணி
உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சேலத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்து, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுத்தலின்படி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 1 ஆம் தேதி சேலத்தில் பாமக சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேச உள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு சமுதாய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் குழு அமைத்து பாமக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடுகிறது.
உள்ளாட்சி அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, தனி அந்தஸ்து வழங்க வேண்டும். மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு என மூன்று நிலைகளாக அரசு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி குறைந்து வருகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்கள் போல் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருவதில்லை. இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
மேலும், வேளாண் பொருட்களை மூலப்பொருளாக கொண்ட தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும். வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
காவிரி நீர் விவகாரத்தில், தமிழகம் தொடர்ந்து தனது உரிமையை இழந்து தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் அவல நிலை உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளுக்கு பின்னரே அதுதொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு தொடுத்துவிட்டதாகக் கூறி தமிழக அரசும் தட்டிக் கழிக்கக் கூடாது. விவசாயிகளின் போராட்டத்தை மாநில அரசு மதிக்க வேண்டும்.
மேலும், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை கைவிட வேண்டும். இப்பிரச்னையில் தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தமிழரசு, க.சண்முகம், இரா.அருள், துணைத்தலைவர் கார்த்தி, கண்ணையன், மாவட்ட செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், அண்ணாதுரை, செல்வம், மாவட்ட தலைவர்கள் அன்புக்கரசு, கே.சி.ஆறுமுகம், சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், நடராஜ், பாலு, அண்ணாமலை, கோவிந்தராஜ், சதீஷ், விஜய்ராஜா, மாதவி, வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.