தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னோர்களிற்கான மஹாளய பட்சம் இன்று ஆரம்பம்…

புரட்டாதி மாதப் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மஹாளய பட்சமாகும்.

அந்தவகையில் இன்றைய தினம் மஹாளய பட்சம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும்.

இந்த கால பகுதியில் இறந்துபோன எமது முனோர்களின் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும். இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பதும்  நம்பிக்கை.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று  சொல்லப்படுகிறது.

இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீவதிக்க பூலோகத்திற்க்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்களில் பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.

அதோடு பித்ரு கடன் செய்வதால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களிடம் உள்ள  நம்பிக்கை.

மஹாளய பட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.

நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடிக் கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இதனால், வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ அதனைத் தானம் அளிக்கலாம்.

இதேவேளை  பிதுர் காரியத்துக்காகவே பிரசித்தி பெற்ற தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவதுதான் சிறப்பு என்பதும் குறிப்பிட்டு சொலவேண்டிய விடயம்.

Comments
Loading...