இலங்கை பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக் கூறும் இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்தகால வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு உள்ளக மனித உரிமை கலாசாரமொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் அது கேட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஊடக அதிகாரி ஒலொப்ப்ளொம்க் விஸ்ட் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. சர்வதேச் சட்டங்களுக்கு அமைவாக குற்றச் செயல்களுக்குப்  பொறுப்புக் கூறுதல் தொடர்பான பொறிமுறை  உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், குற்றச் செயல்கள் மீள இடம்பெறுவதனைத் தடுத்தல் போன்றவற்றை அடிமட்டத்திலிருந்து செயற்படுத்த வேண்டு மாயின் நாடு முழுவதுமுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பரந்தளவிலான மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

அத்துடன் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறல் செயல்முறை தொடர்பில், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.அத்துடன் பொறுப்புக் கூறல் செயல்முறையில் பங்கேற்பதற்கு நம்பிக்கையளிக்க வேண்டும். படையினருக்கு எதிராக சாட்சியளிப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் ஊடக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைசர்வதேச மன்னிப்பு சபைபொறிமுறைபொறுப்புக்கூறல்மனித உரிமை சட்டங்கள்வாக்குறுதி
Comments (0)
Add Comment