மேற்குக் கரையில் நடந்த போராட்டத்தின் போது இஸ்ரேல் காவல்துறையினர் தாக்கியதால் பாலஸ்தீன அமைச்சர் ஒருவர் உயிரிழந்தார்.
டர்முசியா கிராமத்தில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டு வீசித் தாக்கியதில் நினைவிழந்த ஜியாத் அபு ஐன், ரமல்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ராய்ட்டர் நிறுவன செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணையை தொடக்கி உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அபு ஐன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலர் பான் கி மூன், இரு தரப்பும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அபு ஐன்னின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.