எபோலா தடுப்புப் பணிகளுக்காக 37ஆயிரம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி விடவில்லை எனக் கூறிய ஒபாமா, எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள கினி, லைபீரியா மற்றும் சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவ வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். எபோலாவைத் தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாது, அதனை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எபோலாவுக்கு தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் 1999ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக தெரிவித்த ஒபாமா, அதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் 17 ஆயிரம் பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.