அமெரிக்க தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அளித்துள்ள அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். அதில், காமென்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் மற்றும் இலங்கை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இலங்கை அரசுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலகத்துக்கும் இடையே, தொடர்ந்து ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இலங்கை அரசு நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட சமூகம், மனித உரிமை அமைப்புகள் என அனைத்து தரப்பினரையும் ஆலோசித்து செயல்பட வேண்டும்.
மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு வழக்கறிஞருடன் கூடிய நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதாக கூறியிருக்கும் இலங்கை அரசின் உறுதிமொழிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் உறுதிமொழிகளை அமல்படுத்துவதுவதற்கு ஏதுவாக, அந்நாட்டு நீதித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ராணுவத்தின் வசம் உள்ள நிலங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விரைவில் திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் மீதும், வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் பற்றிய சர்வதேச சட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளிப்பதோடு, காணாமல் போன குடும்பத்திற்கு, சான்றிதழ் அளிக்க வேண்டும்.
மனித உரிமை மீறல் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க இலங்கை அரசு முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
13வது அரசியல் சட்டத்தின்படி அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயல்படுத்துவதை ஐ. நா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
18 மாதங்களுக்குப் பிறகு முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடத்த வேண்டும் என அமெரிக்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.