கவர்னருக்கு அதிகாரம் : டெல்லி சட்டமன்றத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேறியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதிகாரிகள் நியமனம், பொது ஒழுங்கு, போலீஸ் உள்ளிட்டவற்றில் டெல்லி கவர்னருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கடந்த 21–ந் தேதி அறிவித்து, இது தொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அனில்குமார் என்ற போலீஸ் ஏட்டு லஞ்ச வழக்கில் கைதாகி, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி ஐகோர்ட்டை அணுகினார். அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், டெல்லி அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, போலீசாரை கைது செய்கிற அதிகாரம் உண்டு என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில் மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் துணை நிலை கவர்னர் ஆகியோரின் அதிகார வரம்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. தீர்ப்பில், ‘மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பட்டியலின்படி, சட்டங்களை இயற்றுகிற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் துணை நிலை கவர்னர் தன் விருப்பம் போல செயல்பட முடியாது. மந்திரிசபையின் ஆலோசனையின்படிதான் செயல்பட முடியும்’ என கூறப்பட்டது. இந்த தீர்ப்பு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில், உயரதிகாரிகள் நியமனம் விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக விவாதிக்க இரண்டு நாள் அவசர சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மத்திய அரசின் அறிவிப்பை புறக்கணிக்க கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரண்டாம் நாளான இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. வாக்கெடுப்பின்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே, டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பாக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அனுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம்ஆம் ஆத்மி அரசுஉயர் நீதி மன்றம்கவர்னர் நஜீப் ஜங்கெஜ்ரிவால்டெல்லிதீர்மானம்மத்திய அரசு
Comments (0)
Add Comment