கிரீஸுக்கு வரும் அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடைமுறையில் குழப்பம் நீடித்து வருவதாக அகதிகள் நல அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,662 அகதிகள் இரு கிரீஸ் தீவுகளை அடைந்தனர். திங்கள்கிழமை மேலும் சுமார் ஆயிரம் பேர் லெஸ்பாஸ் தீவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. போதிய உதவியாளர்கள் இல்லாததால், அகதிகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து, தாற்காலிக முகாம்களில் கொண்டு சேர்ப்பதில் குழப்பம் நிலவுவதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில் ஐரோப்பிய யூனியன், கிரீஸ், துருக்கி இடையே ஏற்பட்ட ஓப்பந்தத்தின் கீழ், இந்த அகதிகளை துருக்கிக்கு திருப்பி அனுப்ப இயலும் என்றாலும், அவர்களைப் பதிவு செய்து தாற்காலிக முகாம்களில் தங்க வைக்க கிரீஸ் முடிவு செய்தது. இந்த நடவடிக்கைகளில் கிரீஸ் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளிலிருந்து கூடுதல் காவலர்கள், அடைக்கல ஆலோசகர்களை அனுப்ப முடிவாகியுள்ளது.
ஆனால் அவர்கள் இந்த வார இறுதியில்தான் கிரீஸ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தாற்காலிக முகாம்களில் போதிய வசதி இல்லை என்று அகதிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு கிரீûஸ வந்தடைந்து, பின்னர் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய யூனியன் ஓர் உடன்படிக்கையை அண்மையில் ஏற்படுத்தியது. அதன்படி, கிரீஸுக்கு வரும் அகதிகள் துருக்கிக்கு அனுப்பப்படுவார்கள். தற்போது துருக்கி அகதி முகாம்களில் சுமார் 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அதற்கான செலவுகளை ஐரோப்பிய யூனியன் நேரடியாக ஏற்கும்.
அகதி பராமரிப்புக்காக துருக்கிக்கு கூடுதல் பொருளுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி வழங்கப்படும். அகதிகள் விவகாரத்தில் துருக்கி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பிரதிபலனாக, அந்த நாட்டை ஐரோப்பிய யூனியனில் முழு உறுப்பினராக ஏற்கும் நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும். கடந்த ஆண்டு இராக், சிரியாவிலிருந்து வெளியேறிய சுமார் 8.5 லட்சம் அகதிகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் என்று தெரிவிக்கப்பட்டாலும், சுமார் 10 லட்சம் அகதிகள் ஐரோப்பாவில் நுழைந்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.