பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், அண்மைய காலங்களில் கடமைநிமித்தம் சென்ற பொலிஸார் மீது பல்வேறு தாக்குதல் இடம்பெற்றிருந்தன. இவற்றைத் தவிர்த்து பொலிஸாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடமைக்குச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் அல்லது ரிவோல்வர் துப்பாக்கியை தம்முடன் எடுத்துச் செல்லவது கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நடைமுறை இருந்தபோதிலும், யுத்த காலத்தில் ரி56 ரகத் துப்பாக்கிகளுடனேயே பொலிஸார் கடமையில் ஈடுபட்டனர். எனினும், யுத்தம் முடிவடைந்த நிலையில் பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் கெளரவத்தை கருத்தில்கொண்டு மீண்டும் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தேவையற்ற முறையில் பொலிஸார் துப்பாக்கியைப் பிரயோகிக்க முடியாது.எனினும், தேவைப்படும் பட்சத்தில் பொலிஸார் அதனை உச்ச அளவில் பயன்படுத்தும் அதிகாரம் சட்டத்தில் உள்ளது என்றும் கூறினார்.