ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முதல் விசாரணைகளைத் தொடங்குகிறது.

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை இந்த அமர்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வு ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். 21 ஆம் திகதி கோரளைப்பற்று வடக்கு – வாகரை கோரளைப்பற்று தெற்கு – கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 22ஆம் திகதி மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1100 வரையான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்டளவான முறைப்பாடுகளே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிகிறது. அதே நேரம், குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் கூட ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு 1990 – 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தன்னுடைய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, செயலாளர் எச். டபிள்யூ குணதாச, பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு
Comments (0)
Add Comment