ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவுகளில் எந்த விரிசலும் கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சில விடயங்கள் தொடர்பாக, முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும் இருவருக்கும் இடையில் விரிசல் எதுவும் கிடையாது. அமைச்சரவைக் கூட்டங்களில் ஜனாதிபதியுடன் வாதம் செய்வது புதிய விடயமல்ல. அவ்வாறான தர்க்கங்களை ஜனாதிபதி ஊக்கப்படுத்தியுள்ளார்.நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.அதன் போது ஜனாதிபதி உரத்த தொனியில் பேசினார்.
அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களின் போது திறந்த மனதுடன் தங்களது கருத்துக்களை வெளியிட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் உத்தரவு. சில நேரங்களில் ஜனாதிபதி ஆத்திரமடைகிறார். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் வழமையானவை. சில ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தியுள்ளன. இவற்றைக் கண்டு குழப்பமடையப் போவதில்லை.
எவ்வாறெனினும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மையும் தமது கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.