டோனி ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு எதிராக ஆந்திர மாநில நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியை மகாவிஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. டோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப்படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. பல நிறுவனங்களில் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததை சுட்டிக்காட்டும் வகையில், ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, டோனி மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே போன்று ஐதராபாத் மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்திலும் டோனி மீது வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு டோனி ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் டோனி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டோனி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்த கிரிக்கெட் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி முடிவு பெறுகிறது. அதன்பின்னர் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை செல்கிறது. அதன்பின்னர் மார்ச் மாதம் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் டோனி ஆந்திர மாநிலம் அனந்தபூர் கோர்ட்டுக்கு நேரில் வந்து ஆஜராவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, டோனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜாமீனில்டோனிபிடிவாரண்ட்வரமுடியாதவெளியே
Comments (0)
Add Comment