மோடி தலைமையில் ஊழல் அற்ற நிர்வாகத்தை அளித்துள்ளோம்; அருண் ஜெட்லி பெருமிதம்

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஓராண்டு ஆட்சியில் ஊழல் அற்ற நிர்வாகத்தை அளித்துள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், மத்திய நிதி மந்திரி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஓராண்டு காலம், நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்த அரசு எந்த திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் மரியாதை அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் ஊழல் அற்ற நிர்வாகத்தை அளித்ததுதான் இந்த அரசின் முக்கியமான சாதனை. அரசியல் ஊழலில் இருந்து சாதாரண மனிதன் விடுபட்டுள்ளான். ஒரு வருடத்தில் இதை சாதித்துள்ளோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் உள்ளது. வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டும் அளவுக்கு இந்தியாவுக்கு திறமை உள்ளது. அதற்கேற்ப பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரூ.50 ஆயிரம் கோடிக்கு என்னிடம் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன.

மிக முக்கியமான மறைமுக வரி சீர்திருத்த நடவடிக்கையாக, சரக்கு, சேவை வரியை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். ஏனென்றால், அதிக வரிவிதிப்பு, முதலீட்டாளர்களுக்கோ, பொருளாதாரத்துக்கோ சாதகமாக இருக்காது. இந்த வரி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும். அதில் தாமதம் ஏற்பட விடமாட்டோம். நேரடி வரி விகிதங்களையும் உலகளாவிய நிலவரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆனால், எதிர்க்கட்சிகள், சரக்கு, சேவை வரி மசோதாவுக்கும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும், வேகமான முடிவுகளும், உறுதியான நடவடிக்கைகளும் எடுப்பதுதான் மோடி அரசின் தனித்தன்மை.

நாங்கள் சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கலில் ஈடுபட்டபோதிலும், முதலாளித்துவத்துக்கு இடம் அளிக்க மாட்டோம். தெளிவற்ற பொருளாதார கொள்கைதான் முந்தைய காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால், நாங்கள் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஆதரவாக இருப்போம். எங்களது சமூக பாதுகாப்பு திட்டங்கள், நாட்டிலேயே வலிமையான ஒன்றாக திகழப்போகின்றன.

இதற்கு முன்பு அவநம்பிக்கையும், சோர்வான சூழ்நிலையும் நிலவியது. ஆனால், தற்போது ஆர்வமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என  அருண் ஜெட்லி கூறினார்.

அருண் ஜெட்லிஇந்தியாஊழல் அற்ற நிர்வாகம்நரேந்திர மோடிபா.ஜ.கமத்திய நிதி மந்திரி
Comments (0)
Add Comment