தனது நாட்டின் இராணுவ நிலைப்பாட்டின் தயார் நிலையை பரிசீலிப்பதற்கு முன்கூட்டியே தாக்குதல்களை நடத்த தனது இராணுவத் தலைவர்களை கிம் யொங் – உன் கோரியுள்ளதாக அந்த செய்தி முகவர் நிலையம் கூறுகிறது.
வட கொரியாவின் அண்மைய அணுசக்திப் பரிசோதனை மற்றும் ஏவுகணை ஏவும் நடவடிக்கை என்பன தொடர்பில் அந்நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை புதிய கடுமையான தடைகளை விதித்ததையடுத்தே கிம் யொங் – உன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வட கொரியா வியாழக்கிழமை 6 ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை செய்திருந்தது.
இந்நிலையில் இராணுவப் பயிற்சியொன்றின் போது உரையாற்றிய கிம் யொங் – உன், “வட கொரியாவின் இருப்பு நிலைக்கு எதிரிகள் அச்சுறுத்தலாக உள்ளனர். அதனால் நாங்கள் எப்போதும் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க தயாராக இருக்க வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவானது ஏனைய நாடுகள் மீதும் மக்கள் மீதும் போரைக் கட்டவிழ்த்து விட வலியுறுத்தி வருகின்ற நிலையில் எமது இறைமையையும் வாழ்வதற்கு எமக்குள்ள உரிமையையும் பாதுகாப்பதற்கும் எமது அணுசக்தி ஆற்றலை ஊக்குவிப்பதே ஒரே வழியாகவுள்ளது” என அவர் கூறியதாக கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது.
வட கொரியா இவ்வாறு அச்சுறுத்தல்களை விடுப்பது வழமைக்கு மாறான ஒன்றல்ல என்ற போதும் அந்நாடு ஏவு கணையொன்றைப் பயன்படுத்தி ஏவக்கூடிய சிறிய அணு ஆயுதமொன்றை விருத்தி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண் டுள்ளதா என்பது குறித்து மேற்குலக நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.