செயற்கைக்கோள் ஏவுவதாக கூறி மீண்டும் அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைக்கு தயாராகி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. ஆராய்ச்சி பணிகளுக்காக செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளதால் தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவேண்டாம் என சர்வதேச கடல் அமைப்பிற்கு வட கொரியா கடந்த 2-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறிய வகையில் கடந்தமாதம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. அந்நாட்டின் இந்த அத்துமீறலானது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் எதிர்ப்பையும், அந்நாட்டின்மீது ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சம்பாதித்துள்ள நிலையில் வடகொரியா அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியானது. பூமியை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் செயற்கைக்கோளை ஏவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனவே, வரும் எட்டாம் தேதி முதல் 25-ம் தேதிவரை எங்கள் நாட்டு கடற்பகுதியில் கப்பல்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என சர்வதேச கடல் அமைப்பு உள்ளிட்ட ஐ.நா.வின் மூன்று அமைப்புகளுக்கு வடகொரியா கடிதம் எழுதியுள்ளது.
வடகொரியாவின் தற்போதைய அதிபரின் தந்தையான மறைந்த முன்னாள் அதிபர் கிம் ஜாங்-கின் பிறந்தநாளான வரும் 16-ம் தேதி இந்த செயற்கைக்கோள் ஏவப்படலாம் என சர்வதேச உளவு அமைப்புகள் மோப்பம் பிடித்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கிர்பி கேட்டுக் கொண்டார்.
செயற்கைக்கோளை ஏவும் போர்வையில் நீண்டதூரம் பாய்ந்து செல்லக்கூடிய நவீனரக ஏவுகணையை பரிசோதிக்க திட்டமிட்டுள்ள வடகொரியா உடனடியாக தனது முயற்சியை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தனது செயலுக்கு பெரிய விலையை தர வேண்டியதாகி விடும் என தென்கொரியா அதிபர் மாளிகை எச்சரித்தது. வடகொரியாவின் இந்த திட்டம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துபேசி ஆலோசித்து, எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக அச்சுறுத்திவரும் அந்நாட்டின் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குறிப்பிட்டார். ஆனால், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை பரிசோதிப்பதற்காக புவியியல் ஆய்வுக்கு செயற்கைக்கொள் அனுப்பப் போவதாக அறிவித்த வடகொரியா, தற்போது ராக்கெட்டை ஏவுவதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அநேகமாக இன்றிலிருந்து (7-ம் தேதி) 14-ம் தேதிக்குள் எந்நேரமும் சர்ச்சைக்குரிய இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படலாம் என்ற அச்சம் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. வடகொரியாவின் இந்த தறுதலைத்தனத்துக்கும், முரட்டுப் பிடிவாதத்துக்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதே கருத்தை பதிவு செய்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் நம்முடைய நட்பு நாடுகள் மற்றும் அவை அமைந்துள்ள பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தங்கள் நாட்டு கடல் எல்லை வழியாக வரும் ஏவுகணைகள் சுட்டுத் தள்ளுவோம் என ஏற்கனவே ஜப்பான் எச்சரித்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த முயற்சியின் விளைவாக, விரைவில் ஏவப்படவுள்ள ராக்கெட்டை ஜப்பான் சுட்டு வீழ்த்தினால், அதன் பாதிப்பும், பின்விளைவும் மிகமோசமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், தென்கொரியாவின் கோரிக்கைக்கு இணங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. வடகொரியாவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ரகசிய கூட்டத்தில் வடகொரியாவுக்கு எதிராக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.