அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக நாபா நகரில் உள்ள பல வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும், கட்டிடங்களும் சேதம் அடைந்தன.
கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இடிபாடுகளில் சிக்கி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மின் வினியோகமும், கியாஸ் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சில இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைப்பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 1989–ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
இதேபோல் பெரு நாட்டிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.