பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, அல்கொய்தா, பாகிஸ்தான் தலீபான் மற்றும் பிற வெளிநாட்டு தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இங்கு பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஜூன் மாதம் முதல் ஜார்ப்-இ-ஆஜ்ப் என்ற பெயரில் போர் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்தி தீவிரவாதிகளை ஒழித்து வருகிறது.
வடக்கு வாஜிரிஸ்தானின் கர் தாங்கி கிராமத்தில் அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான உமர் பரூக் என்ற உமர் உஸ்தாத் பதுங்கி இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்து, அதன்பேரில் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்தது. அவர் தங்கி இருந்ததாகக் கருதப்படுகிற வளாகத்தை குறிவைத்து அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உமர் பரூக்கும், பதுங்கியிருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர். அதே நேரத்தில் ஒரு அதிகாரி, இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக தெரிவித்தார்.
தெற்கு வாஜிரிஸ்தானில் நேற்று அல்-கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவரும், அமெரிக்காவால் தலைக்கு ரூ.30 கோடி விலை அறிவிக்கப்பட்டவருமான அத்னன் எல் சுக்ரிஜூமா, ராணுவ தாக்குதலில் பலியாகினான். பாகிஸ்தானில் அடுத்தடுத்து அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு வருவது அந்த இயக்கத்திற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.