ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தலைநகர் காபூலில் செயல்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் புகுந்த இரண்டு தீவிரவாதிகள் திடீரென வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர்.
விடியவிடிய நடந்த இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். குண்டு வெடித்தபின் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், இதனால் மாணவர்களும், பணியாளர்களும் அச்சத்தில் உறைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல மணிநேரம் நடந்த சண்டை முடிவுக்கு வந்தபின் பல்கலைக் கழக வளாகம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இருப்பினும் இந்த வளாகம் தொடர்ந்து எலைட் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.